search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக ஊழியரை தற்கொலை"

    சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். #SupremeCourt
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம், அவுரங்காபாத்தில் கல்வி இயக்குனரகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர், மேலதிகாரி தன்மீது அதிக பணிச்சுமையை சுமத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, சம்மந்தப்பட்ட அதிகாரி தன் கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்து, அதன்கீழ் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் வழக்கு பதிவானது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த அதிகாரி மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில், “ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு இருந்தால் அது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் குற்றம்சாட்ட வாய்ப்பு உண்டு.

    ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரையில், கூறப்பட்டு உள்ள தகவல்கள் முற்றிலும் போதுமானவை அல்ல. மேலதிகாரி, ஊழியருக்கு சில வேலைகளை செய்யுமாறு பணித்தார் என்பதாலேயே குற்ற மனம் அல்லது தீய நோக்கம் இருந்தது என எடுத்துக்கொள்ள முடியாது” என கூறப்பட்டு உள்ளது. 
    ×